உணவுக்காக ஏங்கும் கோவை அரசு பயிற்சி மருத்துவர்களின் அவலம்
கோவை , ஏப்.15- கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை பரவவிடாமல் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ,செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியா ளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆபத்தான இந்த நோயுடன் போராடும் மருத்துவ குழுவினருக்கு போதுமான எதிர்ப்பு சக்தி உணவுகளும், அவர்கள் சிகிச்சை கொடுக்கும் பொழுது தேவைப்படும் பாதுகாப்பு உபகர ணங்களும் கிடைப்பதில்லை அல்லது வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
பொய்யான அமைச்சர்களின் கூற்று
குறிப்பாக, பயிற்சி மருத்து வர்களுக்கு தேவையான உணவு கள், அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் பயிற்சி மருத்துவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழக முதல்வர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில்கூட கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை முழுமையாக பாதுகாக்க வேண்டும்.
அவர்களுக்கான பாதுகாப்பு உபகர ணங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், உணவு ஏற்பாடுகள் முழுமையாக செய்து தரப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து கேள்வி எழுந்தபோதெல்லாம் அமைச்சர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றே ஊடகத்தில் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால் அது உண்மையில்லை என்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் சி.ஆர்.ஆர்.ஐ,. குவாட்டர்ஸில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு முறையான உணவுகள் சரியான வேளையில் வழங்க ப்படவில்லை என பயிற்சி மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மனஉளைச்சலில் பயிற்சி மருத்துவர்கள்
இந்த சிஆர்ஆர்ஐ விடுதி உணவகத்தில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் (பி.ஜி),இளநிலை பயிற்சி மருத்துவர்கள்(சி.ஆர்.ஆர்.ஐ) ஆகிய இரண்டு பயிற்சி மருத்து வர்களும் என கிட்டத்தட்ட 550 பேர் தினமும் உணவு உண்டு வருகின்றனர். ஆனால் இந்த விடுதியை சேர்ந்த இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விடுதியில் உள்ள உணவகம் திங்கள் இரவு முதல் மூடப்பட்டது. இதனால் உணவகத்தை நம்பியுள்ள பயிற்சி மருத்துவர்கள் 550 பேர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உணவு வசதி செய்து கொடுக்கக் கோரி மனுவாயிலாக வேண்டுகோள் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து டிவிட்டர் மூலம் பயிற்சி மருத்துவர்களின் உணவு வேண்டிய கோரிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலருக்கு அனுப்பினர். இதனையடுத்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் செவ்வாயன்று காலை 10.30 மணி அளவில் விடுதிக்கு சென்று உணவுகளை கொடுத்தனர். ஆனால் பயிற்சி மருத்துவர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் 300 பேருக்கு உணவு கொண்டு வந்தனர்.
அதுவும் சுகாதாரமற்ற நிலையில் உணவை கொண்டுவந்தனர். இதுகுறித்து உதவி இருப்பிட மருத்துவரிடம் மருத்துவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இவரிடம் எந்த பதிலும் பெற முடியவில்லை. இதையடுத்து கிடைத்த உணவுகளை பங்கிட்டு உண்டு மருத்துவப் பணிக்கு சென்றனர். சிலர் உணவுகளை உண்ண விருப்பமின்றி பணியை புறக்கணித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் செவ்வாயன்று மதிய உணவு 4 மணிக்குத்தான் கொண்டு வந்தனர். அதுவும் குறைந்த எண்ணிக்கையில் எடுத்து வந்தனர். இது பயிற்சி மருத்துவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தற்காப்பு உபகரணங்கள் இல்லை
இது குறித்து பயிற்சி மருத்துவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் இந்த கொரோனோ பரவல் காலத்தில் எங்களின் உயிர்களை பணயம் வைத்து பணி செய்து வருகிறோம். எங்களது சக பயிற்சி மருத்துவர் இருவருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்களது ஹாஸ்டல் மெஸ் மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாங்கள் மக்கள் சேவையில் இறங்க வேண்டிய நேரத்தில் உணவுக்கு வழியின்றி அவதிப்பட்டு வருகிறோம். 500க்கும் மேற்பட்டோர் இருக்கும் விடுதியில் 150, 200 பேருக்குத்தான் உணவு வருகிறது.
இதனால் உணவுக்கு வழியின்றி வெறுப்படைந்து உள்ளோம். தமிழக அரசு எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் உணவு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இந்த சிரமமான காலத்தில் பணி செய்வது கடினம்.
அடுத்தடுத்து இன்னலுக்கு மேல் இன்னலாக பயிற்சி மருத்துவ ர்களாகிய நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 28ஆம் தேதியோடு எங்களது ஒருவருட இன்டன்சிப் பயிற்சியை முடித்துவிட்டோம். ஆனாலும் தேசிய பேரிடர் காலம் என்பதை கருத்தில் கொண்டு எங்களது சேவை காலம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலேயே நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டோம். இப்போது சரியான தற்காப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ததால் கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு பிஜி களுக்கு கொரோனா தொற்று வந்து விட, எங்களது மாஸ் வொர்க்கர்ஸ் 'இனி வேலை செய்யமாட்டோம். எங்க ளுக்கு பயமாயிருக்கிறது' என்று கூறி கிளம்பிவிட்டனர்.
அதிகாரிகளை பார்க்கச் சென்றபோது 'சாப்பாடு உங்கள் பிரச்சனை. அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று அலட்சியமாகப் பேசி அனுப்பிவிட்டனர். நாங்கள் யாரும் கடவுளர்கள் இல்லை. சாதாரண மனிதர்கள். மருத்துவம் பயின்ற மனிதர்கள். அவ்வளவுதான். இப்படி சொல்ல, கரிசனமின்றி நடந்துகொள்ள எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அரசும் அரசு இயந்திரமும் எங்களை இந்த நிலைக்குத் தள்ளி உள்ளது என்றனர்.
மருத்துவ மாணவர்களுக்கு போதிய வசதி:அமைச்சர்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ளாட்சி த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்து வர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு பெரிய ஓட்டல்களில் தங்க வைக்கப்பட உள்ளனர். தரமான உணவும் கொடுக்கச் சொல்லி அறிவுறு த்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
(ந.நி)